உலகக் கோப்பை தொடர் புதிய சவாலை கொடுக்கிறது - விராட் கோலி!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணியின் மீது அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, உலகக் கோப்பை தொடர் உற்சாகமளிக்கும் புதிய சவாலை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “உங்களுக்கு முன்னர் ஏதேனும் ஒரு சவால் இருந்தால், நீங்கள் அதை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். உங்களுக்கு முன் கடினமான சூழல் வந்தால் நீங்கள் உற்சாகமடைவீர்கள். அதிலிருந்து நீங்கள் விலகி செல்ல மாட்டீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளைக் கடந்தும் நான் பல சவால்களை எதிர்கொண்டுதான் இருக்கிறேன். அந்த சவால்களில் வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரும் ஒரு சவாலே. இந்த சவால் எனக்கு உற்சாகமளிக்கிறது.
என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இதுபோன்ற புதிய சவால்கள் தேவைப்படுகின்றன. அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். ரசிகர்கள் எப்போதும் உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அவர்களை விட எனக்கு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. அதனால், நான் சரியான இடத்தில் இருக்கிறேன். நேர்மையாக கூற வேண்டுமென்றால் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. மக்களின் உணர்வுகள் இதில் அடங்கியுள்ளது.
ஆனால், இந்திய வீரர்களை காட்டிலும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள் யார் இருக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்போது நான் அணியில் இருந்தேன். அப்போது எனக்கு 23 வயதுதான். அப்போது உலகக் கோப்பையின் உணர்வுகள் அந்த அளவுக்கு என்னை பாதிக்கவில்லை. ஆனால், அதன்பின், பல உலகக் கோப்பையில் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்போது மூத்த வீரர்களின் வலியை உணர முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.