விராட் கோலி 100 சதங்களை கடப்பாரா? - ரிக்கி பாண்டிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் மொத்தமாக 100 சதங்களை எடுத்துள்ளார். இந்தச் சாதனையை எந்த வீரராலும் தொட முடியாது என ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.
இந்தியாவின் விராட் கோலியும் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தலா 71 சதங்களை எடுத்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி 100 சதங்களை எடுப்பாரா என்கிற கேள்விக்கு ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “மூன்று வருடங்களுக்கு முன்பு, சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி தாண்டுவாரா எனக் கேட்டிருந்தால் ஆமாம் எனப் பதில் சொல்லியிருப்பேன். கோலி இன்னும் பல வருடங்கள் விளையாடப் போகிறார்.
இன்னும் 30 சதங்கள் எடுக்க வேண்டும் என்பது கடினமான இலக்கு. அதேசமயம் விராட் கோலியால் எதுவும் முடியாது என நான் சொல்ல மாட்டேன். நன்கு விளையாட ஆரம்பித்து விட்டால், அவர் எந்தளவுக்குப் பசியுடன் இருக்கிறார், சாதிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.