சிஎஸ்கே என்னை தேர்வு செய்யவில்லை எனில் அந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்- தீபக் சாஹர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில் இருந்து 200 வீரர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்வைத்த வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டன.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. அதன்படி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது.
இதில் மிகமுக்கியமாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆன்கேப்ட் வீரராக ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 10 முதல் 15 கோடிகளை சேமித்துள்ளது. இதனால் எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகளும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த தக்கவைப்பு பட்டியலில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹாரின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த முறை சென்னை அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த அவர், கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தீபக் சஹாருக்காக மீண்டும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டுவதுமா என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சீசனில் சிஎஸ்கே அணி தன்னை தக்கவைக்காவிட்டாலும், எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் தன்னை நிச்சயம் வாங்கு என தீபக் சஹார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கடந்த மெகா ஏலத்திலும் அவர்களால் நான் தக்கவைக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் எனக்காகப் ஏலத்தில் போட்டி போட்டு என்னைத் திரும்ப வாங்கினர். இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் பவர்பிளேயில் சுமார் 90-100 ரன்கள் எடுக்கப்படுவதாலும், ஒவ்வொரு அணியும் அடிக்கடி 200 ரன்களுக்கு மேல் அடித்ததால் எனது திறமைக்கு இப்போது மதிப்பு அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆட்டத்தின் அந்த கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்துவதில் நான் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன் என்பதை நிரூபித்துள்ளேன். அவர்கள் மீண்டும் எனக்காக ஏலம் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
நான் மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியை அணிய விரும்புகிறேன், இல்லையென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்காக ஏலம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 81 போட்டிகளில் விளையாடியுள்ள தீபக் சஹார் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் சர்வதேச அளவில் 25 டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.