உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் வெற்றி பெரும் அணி மற்றும் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.11. 71 கோடி ரூபாயும், தண்டாயிதமும் வழங்கப்படும். இதில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.5.85 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.3.29 கோடியும், நான்காம் இடத்தை பெறும் அணிக்கு ரூ.2.56 கோடியும், ஐந்தாம் இடம் பெறும் அணிக்கு ரூ.1.46 கோடியும் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
மீதமுள்ள நான்கு அணிகளுக்கு தலா ரூ.73.2 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. அதேசமயம் இப்போட்டி டிராவில் முடியும் பட்சத்தில் முதல் இரண்டு அணிகளுக்கான பரிசுத்தொகை சரிசமமாக பிரிக்கப்பட்டு வழங்கப்படும் என்று ஐசிசி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.