ஊக்கமருந்து விவகாரத்தில் வங்கதேச வீரருக்கு தடை!
வங்கதேசத்தை சேர்ந்த 27 வயது வீரர் ஷாஹிதுல் இஸ்லாம். வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹிதுல், வங்கதேசத்திற்காக ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய ஒரு டி20 போட்டியில் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அந்த குறிப்பிட்ட தொடரில் பாகிஸ்தானிடம் 0-3 என தோல்வியடைந்தது வங்கதேச அணி.
வங்கதேசத்திற்காக ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே ஆடிய ஷாஹிதுல் இஸ்லாம் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினார். கடந்த மே 28ஆம் தேதி இவர் மீது ஊக்கமருந்து புகார் எழுந்தது. க்ளோமிஃபீன் என்ற ஐசிசியால் தடை செய்யப்பட்டதை அவர் எடுத்துக்கொண்டது உறுதியானது.
எனவே அவருக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட 10 மாதங்கள் தடை விதித்துள்ளது ஐசிசி. கடந்த மே 28ஆம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு இந்த தடை அமல்படுத்தப்பட்டது என்பதால் அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வரை ஷாஹிதுல் இஸ்லாம் சர்வதேச போட்டிகளில் ஆடமுடியாது. அதன்பின்னர் அவர் ஆடலாம்.