மிக்கி ஆர்த்தரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐசிசி தலைவர்!

Updated: Mon, Oct 16 2023 22:16 IST
மிக்கி ஆர்த்தரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐசிசி தலைவர்! (Image Source: Google)

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 8ஆவது முறையாக இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான். 

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர், “இந்த உலகக்கோப்பை போட்டி ஐசிசி சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் இல்லை. இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் போல் உள்ளது. பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக எந்த கோஷமும் வரவில்லை. இதனை நான் தோல்விக்கு காரணமாக கூறவில்லை. இந்திய அணியை மீண்டும் இறுதிப்போட்டியில் சந்திக்க ஆதரவாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்றைய நாளில் அவரது குற்றச்சாட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதைவிட மிக முக்கியமாக இப்படியான விஷயங்களை கூறி பாகிஸ்தான் அணியின் படுதோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்று வாசிம் அக்ரம் மிகக் கடுமையான கோபத்தை மிக்கி ஆர்தர் மீது வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ள ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே, “நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து இப்படியான பேச்சுகள் வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதையெல்லாம் அகற்றி விட்டு நாங்கள் வேலை செய்ய பார்ப்போம். 

மேலும் தற்பொழுதுதான் உலகக் கோப்பை ஆரம்பித்திருக்கிறது. மேற்கொண்டு மொத்த விஷயங்களும் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். உலகக் கோப்பை மற்றும் கிரிக்கெட்டை சுற்றியுள்ள விஷயங்களை எப்படி மேம்படுத்தலாம் என்று நாங்கள் யோசிப்போம். இது இன்னும் ஒரு திருப்தியான உலக கோப்பையாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை