ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்திடம் சரணடைந்தது வங்கதேசம்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதரலாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விக்ரம்ஜித் சிங் 3 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காலின் அக்கர் மேனும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த வெஸ்லி பரேசி - ஸ்காட் எட்வர்ட்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பரேஸி 41 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாஸ் டி லீடும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது அரைசதத்தைக் கடந்தார். அவருடன் இணைந்த ஏங்கல்பெர்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
பின் 68 ரன்களுக்கு ஸ்காட் எட்வர்ட்ஸ் விக்கெட்டை இழக்க, 35 ரன்களில் எங்கல்பெர்டும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் லோகன் வான் பீக் அதிரடியாக விளையாடி 23 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் லிட்டன் தாஸ் வெறும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து தன்ஸித் ஹசன் 15 ரன்களுக்கும், நாஹ்முல் ஹொசைன் சாண்டோ 9 ரன்களுக்கும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 5 ரன்களுக்கும், முஷ்பிக்கூர் ரஹிம் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து பால் வான் மீகெரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அதுவரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மஹ்முதுல்லா - மஹெதி ஹசன் இணை ஓரளவு தக்குப்பிடித்து சிறிது நேரம் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின் மஹெதி ஹசன் 17 ரன்களிலும், மஹ்முதுல்லா 20 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க வங்கதேச அணியின் தோல்வியும் உறுதியானது.
இறுதியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 20 ரன்களிலும், தஸ்கின் அஹ்மத் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பால் வான் மீகெரன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.