ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், வில்லியம்சன் அபாரம்; பாகிஸ்தானுக்கு 402 டார்கெட்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்திருந்த டெவான் கான்வே, ஹசன் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ரவீந்திராவுடன் இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின்னும் அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து சதமடித்து விளையாடி வந்த ரச்சின் ரவீந்திராவும் 15 பவுண்டரி, ஒரு சிக்சர் என 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டெரில் மிட்செல் - மார்க் சாப்மேன் ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 300 ரன்களைக் கடந்தது. பின் டெரில் மிட்செல் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மார்க் சாப்மேன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து இறுதியில் அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி, இஃப்திகார் அஹ்மத், ஹாரில் ராவுஃப் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.