பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தது ஆஸ்திரேலியா!

Updated: Sun, Sep 10 2023 12:40 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் என்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இதில் நேற்று ப்ளூம்போயிண்டன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய தென் ஆப்பிரிக்காவை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 392/8 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதமடித்து 106 ரன்களும் மார்னஸ் லபுஷாக்னே 124 ரன்களும் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 394 என்ற பெரிய ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு 81 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அனைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த குயிண்டன் டீ காக் 45 ரன்களிலும் கேப்டன் டெம்பா பவுமா 46 ரன்களிலும் அவுட்டானார்கள்.

ஆனால் மிடில் ஆர்டரில் ஒவ்வொரு ஓவரிலும் 10க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தில் ராஸ்ஸி வேன்டெர் டுஷன் 17, ஐடன் மார்க்ரம் 3, ஹென்றிச் கிளாசெஹ் 49, டேவிட் மில்லர் 49 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் பெரிய ரன்களை எடுக்க தவறி அவுட்டானார்கள். இதனால் 41.5 ஓவரில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா மீண்டும் சொந்த மண்ணில் தோல்வியில் சந்தித்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு 123 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த ஆஸ்திரேலியாவுக்கு, ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களும் நேதன் எலிஸ், சீன் அபோட், ஆரோன் ஹார்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன்மூலம் இந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி  2 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அத்துடன் இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 121 புள்ளிகளுடன் பாகிஸ்தானை (120) பின்னுக்கு தள்ளியுள்ள ஆஸ்திரேலியா மீண்டும் தங்களுடைய நம்பர் ஒன் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே முதலிடத்தில் இருந்த அந்த அணியை சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்து பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் நம்பர் ஒன் இடத்தை தன்வசமாத்தியது.

இருப்பினும் தற்போது தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரும் ஆஸ்திரேலியா முழுமையாக ஒரு மாதம் கூட விட்டுக் கொடுக்காமல் அந்த பட்டத்தை பாகிஸ்தானிடம் இருந்து பறித்துள்ளது. அதிலும் குறிப்பாக விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பை முன்பாக முதலிடத்திற்கு வந்துள்ள ஆஸ்திரேலியா தங்களை வலுவான கிரிக்கெட் அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை