ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது ஆஸ்திரேலியா!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும், அதிரடி வீரர் குயின்டன் டி காக் 3 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 10 ரன்களுக்கும் மற்றும் ரஸ்ஸி வேண்டர் டுசென் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிர்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹென்ரிச் கிளாசென் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்கோ ஜான்செனும் ரன்கள் ஏதுமின்றி அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய டேவிட் மில்லர் நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் உலகக்கோப்பை வரலாற்றி நாக் அவுட் சுற்றில் சதமடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையையும் டேவிட் மில்லர் படைத்துள்ளார்.
பின் 116 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 101 ரன்களை எடுத்திருந்த டேவிட் மில்லரின் விக்கெட்டை பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 29 ரன்களை எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைக் கடந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 18 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் - ஜோஷ் இங்கிலிஸ் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். பின் 30 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித்தும், 28 ரன்களில் ஜோஷ் இங்கிலிஸும் என இருவரது விக்கெட்டையும் ஜெரால்ட் கோட்ஸி கைப்பற்றி ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க வசம் திரும்பினார்.
இதையடுத்து இணைந்த மிட்செல் ஸ்டார்க் - கேப்டன் பாட் கம்மின்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமின்றி 8ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.