ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 11 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னரும் 15 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷாக்னே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸும் 3 ரன்களில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னேவும் 71 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கேமரூன் க்ரீன் - மார்னஸ் லபுஷாக்னே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 47 ரன்களில் கேமரூன் க்ரீனும், 35 ரன்களில் மார்கஸ் ஸ்டொய்னிஸும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸும் 10 ரன்களில் அவுட்டானார்.
அதன்பின் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஆடம் ஸாம்பா 4 பவுண்டரிகளை விளாசி 29 ரன்களைச் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு அல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்டும் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - பென் ஸ்டோக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மாலன் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து ஸ்டோக்ஸுடன் இணைந்த மொயின் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் அரைசதம் கடந்திருந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டோன் 2 ரன்களிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொயீன் அலி 42 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
இதைத்தொடர்ந்து இணைந்த கிறிஸ் வோக்ஸ் ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய டேவிட் வில்லி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வோக்ஸ் - ரஷித் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல போராடினர். ஆனால் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களை எடுத்திருந்த கிறிஸ் வோக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 20 ரன்களை எடுத்திருந்த ஆதில் ரஷித்தும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.