இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்திருந்த டெவான் கான்வே, ஹசன் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதையடுத்து ரவீந்திராவுடன் இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின்னும் அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து சதமடித்து விளையாடி வந்த ரச்சின் ரவீந்திராவும் 15 பவுண்டரி, ஒரு சிக்சர் என 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டெரில் மிட்செல் - மார்க் சாப்மேன் ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 300 ரன்களைக் கடந்தது. பின் டெரில் மிட்செல் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மார்க் சாப்மேன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதைத்தொடர்ந்து இறுதியில் அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி, இஃப்திகார் அஹ்மத், ஹாரில் ராவுஃப் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 

Advertisement

இதையடுத்து இலமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அப்துல்லா ஷஃபிக் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - கேப்டன் பாபர் ஆசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடி வந்த ஃபகர் ஸமான் 62 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக அட்டம் தடைப்பட்டது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணிக்கு 19.3 ஓவர்களில் 182 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார்.

இதனால் பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நீடித்த மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

Advertisement

இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஃபகர் ஸமான் 8 பவுண்டரி, 11 சிக்சர்கள் என 126 ரன்களையும், பாபர் ஆசாம் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 66 ரன்களையும் சேர்த்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் 5ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன், அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News