ஐசிசி உலகக்கோப்பை 2023: தனி ஒருவனாக அணியை வெற்றிக்கு அழைச்சென்ற மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மத் ஷா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிந்து பெவிலியன் திரும்பினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 26 ரன்களுக்கும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 22 ரன்களுக்கும், முகமது நபி 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷித் கான் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்து பினீஷிங் கொடுக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இப்ராஹிம் ஸத்ரான் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 129 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தன் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதியடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் வார்னருடன் இணைந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் அவரும் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 18 ரன்களுக்கும், ஜோஷ் இங்லீஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அஸ்மதுல்லா ஒமார்ஸாய் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மார்னஸ் லபுஷாக்னே, மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்செல் ஸ்டார்க் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
அதன்பின் இணைந்த கிளென் மேக்ஸ்வெல் - கேப்டன் பாட் கம்மின்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கம்மின்ஸ் ஒருபக்கம் ஸ்டிரைக்கை மாற்றித்தர மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய கிளென் மேக்ஸ்வெல் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அணியின் வெற்றிக்காக போராடினார்.
அதன்பின்னும் அதிரடியை கைவிடாத மேக்ஸ்வெல், தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும் மனம் தளராமல் தனது அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதன்பின்னும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரி, 10 சிக்சர்கள் என சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கிளென் மேக்ஸ்வெல்லிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.