ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 172 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!

Updated: Thu, Nov 09 2023 17:26 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 172 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் அரையிறுதிச்சுற்றுகு நியூசிலாந்து அணி முன்னேற தங்களது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. 

அதன்படி பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர். 

இதில் பதும் நிஷங்கா 2 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 6 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா ஒரு ரன்னிலும், சரித் அசலங்கா 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேரா 22 பந்துகளில் அரைசதம் கடந்து, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதமடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 

அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 51 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 19 ரன்களிலும், சமிகா கருணரத்னே 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த மஹீஷ் தீக்‌ஷனா - தில்ஷன் மதுஷங்கா இணை 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இதன்மூலம் இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலானது அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், ரச்சீன் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை