ஐசிசி உலகக்கோப்பை 2023: மிட்செல் மார்ஷ் காட்டடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Updated: Sat, Nov 11 2023 18:12 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: மிட்செல் மார்ஷ் காட்டடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி புனேவில் உள்ள மகாராஷ்டிராக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தலா 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பின் நஹ்முல் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய தாஹித் ஹிரிடோய் அரைசதம் கடந்தார். அதன்பின் களமிறங்கிய மஹ்முதுல்லா 32 ரன்களுக்கும், முஷ்பிக்கூர் ரஹிம் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த தாஹித் ஹிரிடோய் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் இறுதியில் அதிரடியாக விளையாடிய மெஹதி ஹசன் மிராஸ் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பா, சீன் அபேட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடிய டேவிட் வார்னர் 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

சதமடித்த பிறகும் தனது அதிரடியைக் கைவிடாத மிட்செல் மார்ஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 177 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 63 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 44.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை