ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கெற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று புதிய சாம்பியனாக வலம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கெற்றவாரு தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் அபாரமான வெற்றியைப் பெற்று அசத்தி வருகின்றன.
இந்நிலையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபீக் - இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அப்துல்லா ஷஃபீக் சிராஜ் பந்துவீச்சில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். ஒரு பக்கம் பாபர் அசாம் நிதானமாக பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் இமாம் உல் ஹக் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 36 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்த நிலையில் 50 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சௌத் சகீல் 6 ரன்களுக்கும், இஃப்திகார் அஹ்மத் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வானும் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து ஆல் அவுட்டானது. அதிலும் குறிப்பாக 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 35 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கவுள்ளது.