உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Nov 16 2023 15:49 IST
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக தப்ரைஸ் ஷம்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து களமிறங்கிய  அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன் எடுக்கமால் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டி காக்கும் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.  தற்போது, முதல் பவர் பிளேவில் 10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸி. பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 2 விக்கெட்களை இழந்து  18 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து அணியை கரைசேர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 10 ரன்களுக்கும், ரஸ்ஸி வேண்டர் டுசென் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 14 ஓவர்களில் 44 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கிளாசென், மில்லர் தலா 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை