ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

Advertisement

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆறு ஓவர்களை கடந்தனர். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய இருவரும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களை குவித்தது.

Advertisement

அதன்பின்னும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி இருவரும் போட்டிபோட்டு பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் உலகக்கோப்பை தொடரில் தனது 5ஆவது சதத்தையும், அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் தனது முதல் உலகக்கோப்பை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர்.

இப்போட்டியில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 259 ரன்களை குவித்தனர். அதன்பின 10 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 121 ரன்களை விளாசிய மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது முதல் பந்திலேயும், ஸ்டீவ் ஸ்மித் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி டேவிட் வார்னர் 150 ரன்களைத் தாண்டினார். அதன்பின் 14 பவுண்டரி 9 சிக்சர்கள் என 163 ரன்களைச் சேர்த்த டேவிட் வார்னர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 13 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 21 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 8 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து சோபிக்க தவறினர்.   

இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளையும், ரன்களை வாரிவழங்கிய ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.  

Advertisement

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபீக் - இமாம் உல் ஹக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, இருவரும் இணைந்து 134 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

பின் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களை எடுத்திருந்த அப்துல்லா ஷஃபிக் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 70 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் கேப்டன் பாபர் ஆசாம் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய சௌத் சகீலும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து ரிஸ்வானுடன் இணைந்த இஃப்திகார் அகமது அதிரடியாக விளையாட இந்த இணை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

Advertisement

ஆனால் 3 சிக்சர்களை விளாசிய இஃப்திகார் அஹ்மதும், அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 46 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்துபெவிலியன் திரும்பினர். இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பையும் பறிபோனது. அடுத்து களமிறங்கிய முகமது நவாஸ், உஸாமா மிர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து தோல்வியை உறுதிசெய்தனர். 

இறுதியில் பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News