டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஐசிசி!

Updated: Wed, Oct 26 2022 18:56 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தொடக்கமே மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதனையடுத்து இந்திய அணி தனது 2ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்காக மெல்பேர்னில் இருந்து சிட்னி சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட சென்றனர். அப்போது தான் அவர்களுக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது பயிற்சியை முடித்த போது, மைதானத்தில் சான்ட்விஜ் மட்டுமே உணவாக தரப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் மிகவும் தரம் குறைந்து இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த இந்திய வீரர்கள் நேற்று மதியம் உணவை அங்கு புறக்கணித்தனர். மேலும் டி20 உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களில் உபசரிப்பு மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டினர். இதுமட்டுமல்லாமல் சிட்னி மைதானத்தில் இருந்து ஹோட்டல் அறை 42 கிமீ தூரம் இருப்பதால் இன்றைய பயிற்சியையும் முழுவதுமாக ரத்து செய்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் குற்றச்சாட்டுக்கு ஐசிசி பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி அதிகாரி ஒருவர், பயிற்சியை முடித்த பிறகு உணவு சரியில்லை என இந்திய வீரர்கள் எங்களிடம் நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளோம். உண்மை தெரிந்த பின்னர் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, உணவு மற்றும் தூரத்தை ஒரு பிரச்சினையாக கொண்டு இந்தியா முழு பயிற்சியையும் ரத்து செய்திருக்க கூடாது என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். முதல் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடியுள்ளது. எனவே இதில் இந்திய அணி மிகவும் ஜாக்கிரதையாக விளையாட வேண்டியது அவசியமாகும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை