டி20 உலகக்கோப்பை: சதாப் கான், இஃப்திகார் காட்டடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 186 டார்கெட்!
எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றிலிருந்து எந்த 4 அணிகள் அறையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பேரதிர்ச்சியாக ஃபார்மில் இருக்கும் முகமது ரிஸ்வான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த முகமது ஹாரிஸ் யாரும் எதிர்பார்காத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து அதிரடியாக் விளையாடிய ஹாரிஸ் 11 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி என 28 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து இந்த சீசனில் ஃபார்ம் இன்றி தவித்து வரும் பாபர் ஆசாமும் வழக்கம்போல சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அதைத்தொடர்ந்து வந்த ஷான் மசூத்தும் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் - இஃப்திகார் அஹ்மத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் முகமது நவாஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சதாப் கானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சருமாக விளாசித்தள்ளினார்.
இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இஃப்திகார் அஹ்மத் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் ருத்ரதாண்டவமாடிய சதாப் கான் 20 பந்துகளில் அரைசதம் கடந்து பிரமிக்கவைத்தார். அதன்பின் 52 ரன்களோடு சதாப் கான் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த முகமது வாசிம் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, 20ஆவது ஓவரின் முதல் பந்தில் இஃப்திகார் அஹ்மதும் விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஓர் அணியாக சேர்ந்து ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தது.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.