ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை பாராட்டிய பிரெட் லீ!

Updated: Fri, May 20 2022 14:16 IST
'If I were to meet him, I would just tell him...': Pace legend Brett Lee's advice for Umran Malik (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் மூலம் பல இளம் வீரர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உம்ரான் மாலிக், யாஷ் தயால், மோக்சின் கான், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் ஆகியோர் தொடர்ந்து வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக்தான் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார். டெல்லி அணிக்கு எதிராக ரௌமேன் பௌலுருக்கு இவர் வீசிய 157 கி.மீ வேகம் கொண்ட பந்துதான், இந்த சீசனில் அதிவேக பந்தாகும். அடுத்து 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி, இவர்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவதால், இவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் சிங் போன்றவர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதும், இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிரெட் லீ, உம்ரான் மாலிக் பந்துவீச்சை தாறுமாறாக புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“உம்ரன் மாலிக்கின் அசுரவேக பந்துவீச்சு எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. 150 கி.மீ வேகத்தில் பந்துவீசுவது சாதரண விசயம் கிடையாது, அதிவேகமாக பந்துவீசுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். உம்ரன் மாலிக் தனது வேகத்தை ஒவ்வொரு போட்டியிலும் அதிகரித்து 160 கி.மீட்டரை நெருங்கி வருகிறார். சில போட்டிகளில் உம்ரன் மாலிக் அதிகமான ரன்கள் வழங்கி விடுகிறார்.

ஆனால் அது பெரிய விசயம் கிடையாது. வெறும் 21வயது வீரரான உம்ரன் மாலிக் நிச்சயம் தனது தவறுகளையும் திருத்திக் கொள்வார். உம்ரன் மாலிக்கை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், அவரிடம் எதையும் மாற்றி கொள்ளவே தேவை இல்லை, இப்போது செய்வதையே தொடர்ந்து செய்யுமாறு அறிவுறுத்துவேன், இது மட்டுமே அவருக்கான எனது அட்வைஸாக இருக்கும், ஏனெனில் அவர் குறையே சொல்ல முடியாத அளவிற்குத்தான் பந்துவீசுகிறார்” எனக் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை