கேப்டன்சி விலகல் குறித்த கேள்விக்கு கடுப்பான கோலி!
ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை பற்றி எந்த விவாதத்திலும் ஈடுபட விராட் கோலி மறுத்துவிட்டார்.
பதவி விலகல் தொடர்பாக விராட் கோலி செப்டம்பரில் தனது முடிவை அறிவித்தார். அதன் பிறகு மாபெறும் விவாதங்கள் நடக்கத் தொடங்கின. ஆனால் நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்த பிரச்சினையில் சர்ச்சையை எதிர்பார்ப்பவர்களுக்கு எவ்வித கிசுகிசுபையும் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
விராட் கோலி இந்த விவகாரம் குறித்து முன்பே நிறைய பேசியிருப்பதாகவும், இப்போது இந்த விவகாரம் குறித்து விவாதம் செய்யும் மனநிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். கேப்டன் பதவி குறித்த கேள்விக்கு கடுப்பான கோலி, இந்த நேரத்தில் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவதிலேயே எங்கள் கவனம் உள்ளது என்றார்.