சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!

Updated: Tue, Nov 29 2022 15:04 IST
"If you don't play Sanju Samson, you will be criticized a lot" - Aakash Chopra on final IND vs NZ OD (Image Source: Google)

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என பின் தங்கியிருக்கிறது. இந்திய அணியின் தோல்வியை விட ரசிகர்களுக்கு பெரிய கவலையாக இருப்பது, சஞ்சு சாம்சனை அணிக்குள் சேர்க்காமல் ஒதுக்கி வைத்திருப்பது தான்.

இதுகுறித்து விளக்கம் தந்திருந்த இந்திய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணியின் பிளேயிங் 11இல் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதை விட, பவுலிங்கும் தெரிந்த ஒரு நல்ல ஹிட்டர் தேவை. எனவே பவுலிங் வேண்டும் என்ற காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறுகின்றனர். இதை ரசிகர்களும் ஏற்காமல் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆகாஷ் சோப்ரா முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார். அதில், “இந்திய அணியில் முன்பெல்லாம் டாப் ஆர்டரில் அதிரடி காட்டிய சேவாக், யுவ்ராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் பவுலிங் வீசுவார்கள். ஆனால் தற்போது டாப் ஆர்டரில் இருந்தாலே பந்துவீசுவதில்லை. வலைப்பயிற்சியில் முயற்சி செய்துக்கூட பார்ப்பதில்லை.

உள்ளூர் போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டையும் செய்யும் வீரர்கள், இந்திய அணிக்கு வந்தவுடன் வலைப்பயிற்சியில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கிற்கு மட்டுமே தயார் ஆகின்றனர். இதற்கு என்ன காரணம் என்றே புரியவில்லை. ஆனால் இதுதான் குழப்பங்களுக்கு முக்கிய காரணம். ஆனால் பவுலர்கள் மேம்பட்டு வருகிறார்கள் என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நல்ல விஷயமாகும்.

இந்திய அணி தற்போதெல்லாம் எங்கு சென்றாலும் 4 வலைப்பயிற்சி பவுலர்கள் மற்றும் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்டை அழைத்து செல்கிறார்கள். இவர்களின் உதவியால் பந்துவீச்சாளர்கள் நன்கு பேட்டிங் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவருமே ஒரே மாதிரியான செயல்பாட்டை தான் கொடுக்கின்றனர். ப்யூர் பேட்ஸ்மேன் தேவைப்படுவதே இல்லை.

மேலும் குல்தீப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், உம்ரான் மாலிக்கை தொடர்ந்து விளையாட வையுங்கள். தீபக் ஹூடாவையும் தொடர்ந்து விளையாடவையுங்கள்,  ஆனால் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக விளையாட முயற்சிக்கவும். சஞ்சு சாம்சனை விளையாடவைக்கவில்லை  என்றால் நிறைய விமர்சிக்கப்படுவீர்கள், அவரை தேர்வு செய்யவில்லை என்றால் விமர்சனங்களுக்கு தயாராக இருங்கள்” என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை