PSL2023: ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்ட இஃப்திகார்!
பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை விளம்பரப்படுத்தும் விதமாக, இதற்கான விளம்பர போட்டி ஒன்று நடைபெற்றது. இப்போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ், பேஷ்வர் ஸால்மி ஆகிய அணிகள் மோதின. இப்போட்டி குயிட்டாவில் நடைபெற்றது. அப்போது, போட்டி நடந்துகொண்டிருந்தபோது, குயிட்டாவில் உள்ள மூசா சௌக்கில் குண்டு வெடித்ததால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால், பார்வையாளர் அரங்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. மைதானத்திற்கு வெளியே புகை சூழ்ந்த காணொளியும் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த பதற்றமான சூழலுக்கு பிறகு, மைதானத்தை சுற்றி நான்கு கிலோ மீட்டார் அளவுக்கு காவல்துறையினர் பாதுகாப்பை வழங்கினர். இதனால், ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. அப்போது, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின் கடைசி ஓவரில் வாகப் ரியாஸுக்கு எதிராக இஃபதிகார் அகமது 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
இஃப்திகார் அகமது கடந்த டி20 உலகக் கோப்பை தொடரின்போது சிறப்பாக செயல்படவில்லை. இதனால், இவரை உடனே அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்ற இவர், 10 போட்டிகளில் 3 அரை சதம், ஒரு சதம் விளாசி அசத்தியிருந்தார்.
இப்படி சிறந்த ஃபார்மில் இருக்கும் இவர்தான், தற்போது 6 பந்தில் 6 சிக்ஸர்களை அடித்து அசத்தியிருக்கிறார். இஃப்திகார் அகமது பாகிஸ்தான் அணிக்காக 43 போட்டிகளில் 125.05 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 523 பந்துகளில் 654 ரன்களை அடித்துள்ளார். இதில், 3 அரை சதங்கள் அடங்கும். 10 ஒருநாள் போட்டிகளில் 24.8 சராசரியுடன் 124 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.