நிச்சயமாக மீண்டும் வலுவாக திரும்பி வருவேன் - ஃபகர் ஸமான்!

Updated: Thu, Feb 20 2025 16:51 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது காயத்தை சந்தித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமானிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயத்தின் தன்மை தீவிரமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்தும் ஃபகர் ஸமான் விலகியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

மேற்கொண்டு அவருக்கு மாற்றாக மற்றொரு இடது கை தொடக்க வீரர் இமாம் உல் ஹக் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அந்த அணியில் இளம் வீரர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதனால் ஃபகர் ஸமான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரும் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியது ஏமாற்றமளிப்பதாக ஃபகர் ஸமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் மிகப்பெரும் மரியாதை மற்றும் கனவாகும். பாகிஸ்தானைப் பலமுறை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, நான் இப்போது காயம் காரணமாக நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளேன். ஆனால் நிச்சயமாக மீண்டும் வலுவாக திரும்பி வருவேன். எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கு நன்றி. நான் வீட்டிலிருந்து எங்கள் வீரர்களை பச்சை நிறத்தில் ஆதரிப்பேன். இது வெறும் ஆரம்பம் மட்டுமே, பின்னடைவை விட மீண்டும் திரும்பி வருவது வலுவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியின் இன்னிங்ஸின் முதல் ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட வில் யங் கவர் திசை நோக்கி அடித்தார். அப்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்கும் முயற்சியில் ஃபகர் ஸமான் ஈடுபட்டார். அப்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்கும் முயற்சியில் ஓடிய ஃபகர் ஸமான் பவுண்டரியை தடுத்து நிறுத்திய நிலையில் காயத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை