பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்று நினைத்தேன் - தீப்தி சர்மா!
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வேல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இத்தொடரில் முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதனைப் படைத்தது.
அதிலும் குறிப்பாக லண்டன் ஸ்பிரிட் அணிக்கு கடைசி 5 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இப்போட்டியில் பரபரப்பான சூழ்நிலையிலும் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த தீப்தி சர்மாவின் காணொளியானது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்போட்டி குறித்து தீப்தி சர்மா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடைசி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது அடுத்த பந்தில் போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அணியின் வெற்றியை கடைசி பந்துவரை இழுத்துச் செல்வதற்கு பதிலாக, முடிந்தவரை விரைவாக விளையாட்டை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. விளையாட்டை முடிக்க அந்த பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஏனென்றால் அந்த நேரத்தில் நான் மட்டுமே செட் பேட்டராக களத்தில் இருந்தேன். அதனால் தான் அந்த பந்தில் நான் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது. அந்த சிக்ஸரை அடித்த பிறகு நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன், ஏனெனில் நான் முன்பு இந்த வாய்ப்புகளை இழந்திருந்தேன் மற்றும் அதை மீண்டும் செய்ய விரும்பவில்லை. எனவே, போட்டியை முடித்து அணிக்கு கோப்பையை பெறுவது குறித்து நான் மிகவும் சாதகமாக இருந்தேன்.
நீங்கள் விஷயங்களைப் பற்றி நேர்மறையாக இருக்கும்போது, உங்கள் உடல் தானாகவே அதற்கு எதிர்வினையாற்றுகிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் போது நான் பின்பற்றிய விஷயங்களை, எதிருவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் பின்பற்றப் போகிறேன். நான் என் மனநிலையை கொஞ்சம் மாற்றிவிட்டேன், சூழ்நிலை எப்படி இருந்தாலும், அதைப் பற்றி நேர்மறையானதாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அழுத்தமான சூழ்நிலைகளில், ஒருவரால் அனுபவிக்க முடியாது. ஆனால் நீங்கள் அந்த சூழ்நிலைகளில் இருப்பதை ரசிக்கிறீர்கள் என்றால், அவை அனைத்தும் சீராக நடைபெறும். மேலும், முகாம்களிலும் இருந்தபோதும் கனமான பந்துகளுக்கு எதிராக நான் நிறைய பயிற்சி செய்துள்ளேன். இந்த பயிற்சிகள் அனைத்தையும் கடந்து, எனது பேட்டிங் உண்மையில் மேம்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.