இது போன்ற ஒரு வெற்றிக்கு இன்னும் 13-14 வருடங்கள் கூட காத்திருப்பேன்- லோகன் வான் பீக்!
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் சதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தேஜா நிடமனுரு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததுடன் 111 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் லோகன் வான் பீக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனால் நெதர்லாந்து அணியும் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது.
இதையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் லோகன் வான் பீக் பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் ஓவரில் அடுத்தது பவுண்டரிகளாக விளாசி 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 30 ரன்கள் அடித்தார். அதன்பின் அவரே நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் பந்துவீச, அதனை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவரில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபர வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லோகன் வான் பீன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
விருது பெற்றபின் பேசிய வான் பீன், “வெற்றி பெற்ற இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த போட்டியில் வெற்றிபெற எதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பேட்டிங்கில் ஸ்காட் எட்வார்ட்ஸ் மற்றும் தேஜா இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி நம்பிக்கையை கொடுத்தார்கள்.
13-14 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். எண்ணற்ற பல போட்டிகளில் இதுபோன்ற சூழல்களை சந்தித்து தோல்விகளையும் எதிர்கொண்டு இருக்கிறேன். இம்முறை வெற்றியை கண்டது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் இது போன்ற ஒரு வெற்றிக்கு இன்னும் 13-14 வருடங்கள் கூட காத்திருக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.