ஐஎல்டி20 2024: போபாரா, லிட்டில் அபார பந்துவீச்சு; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Mon, Feb 05 2024 23:07 IST
ஐஎல்டி20 2024: போபாரா, லிட்டில் அபார பந்துவீச்சு; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி! (Image Source: Google)

ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - அபுதாபி நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரகள் நிரோஷன் டிக்வெல்லா 4, ஜான்சன் சார்லஸ் 1, லியாம் லிவிங்ஸ்டோன் 2, சீன் வில்லியம்ஸ் 5, ஜோ டென்லி 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் கேப்டன் கொஹ்லர் காட்மோர் 19, டேனியல் சம்ஸ் 24 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதனால் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவி போபாரா 4 விக்கெட்டுகளையு, ஜோஷுவா லிட்டில் 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - கைல் பெப்பர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் கைல் பெப்பர் 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அலிஷான் ஷராஃபு ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். 

அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ கிளார்க் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜவதுல்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சாம் ஹைன் 9, லௌரி எவான்ஸ் 3 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் முகமது ஜவாதுல்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐஎல்டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி உறுதிசெய்துள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை