ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேமி ஸ்மித் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் ஒரு ரன்னிலும், ஜோர்டன் காக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடந்து களமிறங்கிய ஜெரால்ட் எராஸ்மஸும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இணைந்த ஜேம்ஸ் வின்ஸ் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அயான் அஃப்சல் கான் 10 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிம்ரான் ஹெட்மையரும் 34 ரன்களில் தனது விக்கெட்ட இழந்தார்.
இறுதியில் டோனிமிக் டிரேக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் குகெலீஜ்ன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.