ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை 180 ரன்களி சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - மைக்கெல் கைல் பெப்பர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில்அதிரடியாக விளையாடிய மைக்கெல் கைல் பெப்பர் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோ கிளார்க் 12 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய அலிஷான் ஷராஃபு, சாகர் கல்யான், லௌரி எவான்ஸ், இமாத் வசீம், சாம் ஹைன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த ஆண்ட்ரே ரஸல் - டேவிட் வில்லி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 3 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 16 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இறுதியில் டேவிட் வில்லி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் சுனில் நரைன் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஷுவா லிட்டிலும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதில் ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வில்லி 26 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.