ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!

Updated: Tue, Jan 23 2024 21:29 IST
Image Source: Google

இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு அலிஷான் ஷரபு - ஆண்ட்ரீஸ் கொஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிஷான் ஷரபு 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் கைல் 5 ரன்களிலும், சாம் ஹைன் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரீஸ் கொஸ் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய லௌரி எவான்ஸ், இமாத் வசிம் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் ரவி போபாரா, டேவிட் வில்லி, சுனில் நரைன் என களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக விளையாடி வந்த ஆண்ட்ரே ரஸல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களில் ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட், முகமது ரோஹித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை