ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய கைல் மேயர்ஸ் 19 ரன்களுக்கு விக்கெட்ட இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஆண்டிரிஸ் கஸும் 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், அவருடன் இணைந்து விளையாடி வந்த ஜோ கிளார்க் 24 ரன்களுக்கும், அலிஷன் ஷராஃபு 5 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களை எடுத்த கையோடு மைக்கேல் பெப்பரும் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜேசன் ஹோல்டர் 16 ரன்களையும், டேவிட் வில்லி 11 ரன்களையும் சேர்க்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அயான் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆடம் லித் 2 ரன்களிலும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 14 ரன்னிலும், ஜோர்டன் காக்ஸ் 10 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் நிதானமாக விளையாடி வந்த இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் தலா 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஷிம்ரான் ஹெட்மையர் 20 ரன்களையும், மார்க் அதிர் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த மைக்கேல் பெப்பர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.