ஐஎல்டி20 2025: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வைப்பர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு டாம் கொஹ்லர் காட்மோர் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் கொஹ்லர் காட்மோர் ஒரு ரன்னிலும், ஜான்சன் சார்லஸ் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ராய் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் 15 ரன்களுக்கும், மேத்யூ வேட் 5 ரன்களுக்கும், மொயீன் அலி 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கரிம் ஜானத் தனது பங்கிற்கு 3 சிக்ஸர்களை விளாசி 23 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராய் அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தரப்பில் டெவிட் பெய்ன், நாதன் சௌட்டர் மற்றும் குசைமா தன்வீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மேக்ஸ் ஹொல்டன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து 48 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டேனியல் லாரன்ஸ் மற்றும் கேப்டன் சாம் கரண் இணை அதிரடியாக விளையாட அணியின் வெற்றியும் உறுதியானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் லாரன்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும், கேப்டன் சாம் கரண் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 16.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.