ஐஎல்டி20 2025 எலிமினேட்டர்: எம்ஐ எமிரேட்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஷார்ஜா வாரியர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் தொடகக் வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் மற்றும் டாம் பான்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வில் ஜேக்ஸ் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 29 ரன்களில் டாம் பான்டனும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
இதில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களில் நிக்கோலஸ் பூரனும் ஆட்டமிழக்க, ஆடுத்து களமிறங்கிய வீரர்களில் குசால் பெரேரா 18 ரன்களையும், அகீல் ஹொசைன் 15 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் கேப்டன் டிம் சௌதீ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வாரியர்ஸுக்கு டாம் கொஹ்லர் காட்மோர் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் ராயும் 26 ரன்களிலும், மேத்யூ வேட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு தொடக்க வீரராக களமிறங்கிய டாம் கொஹ்லர் காட்மோர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ எமிரேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், எம்ஐ எமிரேட்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.