ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றுன் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு குசால் பெரேரா - முஹ்மத் வசீம் இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குசால் பெரேரா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் பாண்டன் 9 ரன்களுக்கும், முஹ்மது வசீம் 38 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் 5 ரன்களிலும், டேன் மௌஸ்லி 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோமாரியோ ஷெஃபர்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இப்போடியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 49 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ ஷெஃபர்ட் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃப்னிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. எமிரேட்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், அலி கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கைல் மேயர்ஸ் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோ கிளார்க், மைக்கேல் பெப்பர், அலிஷான் ஷராஃபு லௌரி எவான்ஸ் என டாப் ஆர்டர் வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அவர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரிஸ் கௌஸும் 34 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் மட்டுமே சேர்த்தது. எமிரேட்ஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.