ஐஎல்டி20 2025: கொஹ்லர் காட்மோர் அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 3 ரன்னிலும், ஆடம் லித் 13 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரெஹான் அஹ்மத் - ஜோர்டன் காக்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ரெஹான் அஹ்மத் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என் 46 ரன்களிலும், ஜோர்டன் காக்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் தனது பங்கிற்கு 36 ரன்களையும், மார்க் அதிர் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா அணி தரப்பில் கேப்டன் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஷார்ஜா அணிக்கு டாம் கொஹ்லர் காட்மோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் விளையாடிய ஜான்சன் சார்லஸ், ஜேசன் ராய் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் காட்மோருடன் இணைந்த ரோஹன் முஸ்தஃபாவும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் கொஹ்லர் காட்மோர் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 45 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தஃபா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷா, கரிம் ஜானத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த காட்மோர் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயன்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Also Read: Funding To Save Test Cricket
இத்தொடரில் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.