என்னுடைய வேலையை நான் செய்து வருகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Thu, Nov 02 2023 15:03 IST
என்னுடைய வேலையை நான் செய்து வருகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)

இந்திய அணி கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றது. அந்த குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் விளையாடிய விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவர் மட்டுமே தற்பொழுது 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். இந்த வாய்ப்பு தனக்கு வரும் என்றுதான் நம்பவே இல்லை என்பதையும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார். அக்சர் படேல் காயம் அடைந்ததன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 

பத்து ஓவர்கள் பந்துவீசி கேமரூன் கிரீன் விக்கெட்டை கைப்பற்றி 40க்கும் குறைவான ரன்கள் கொடுத்து அசத்தியிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு இதுவரை விளையாடும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கான சிறந்த ஆலோசகராக உள்ளிருந்து செயல்பட்டு வருகிறார். 

இந்திய அணி களத்தில் இருக்கும் பொழுது வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானம் கொண்டு வருவதோடு கூடவே கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு அறிவுரைகளையும் கொண்டு வருகிறார். மைதானத்தில் போட்டிக்கு இடையில் ஆடுகளம் எப்படி இருக்கிறது? எப்படி சென்றால் சரியாக இருக்கும்? என்று அவர் ரோஹித் சர்மா இடம் பேசுவது தொலைக்காட்சியில் வந்திருக்கிறது.

இன்று இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பேட்டி அளித்த அவர், “2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடந்து 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பக்கத்தில் நடந்தது போல் தோன்றுகிறது. நான் அணியில் விளையாடுகிறேனா இல்லையா என்பது வேறு விஷயம். நாம் அணிக்குள் இருந்து எப்படி அணிக்கு பயனாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். 

அதே சமயத்தில் எனக்கென ஒரு வாய்ப்பு வரும் பொழுது அந்த நாளில் நான் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும். இதுதான் என்னுடைய எண்ணமாக இருந்து வருகிறது. அணிக்குள் வீரர்களிடம் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறேன். என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். இதே முகமது சமியிடம் போய் விக்கெட் எடு என்று சொன்னால் போதும் அவர் எடுத்து விடுவார்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை