வர்ணனையாளராக களமிறங்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு சுனில் கவாஸ்கர் வாழ்த்து!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் நகரில் வருகிற 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியை இங்கிலாந்து தொலைக்காட்சி நிறுவனமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளராக தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார். அவர் முதல் முறையாக வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்யவுள்ளார்.
இந்தநிலையில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தினேஷ் கார்த்திக்குக்கு சுனில் கவாஸ்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சுனில் காவாஸ்கர் கூறுகையில்,“தினேஷ் கார்த்திக் டெஸ்டில் அறிமுகமான போது நான் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தேன். தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் தொலைக்காட்சி வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
தினேஷ் கார்த்திக் தனது வர்ணனை பணியை சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவு செய்துள்ளார்.