ஷக்கரே பாரிஸை க்ளீன் போல்டாக்கிய இம்ரான் தாஹிர் - வைரலாகும் காணொளி!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது நிக்கோலஸ் பூரானின் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 101 ரன்களையும், ஜேசன் ராய் 34 ரன்களையும் சேர்த்தனர். கயானா அமேசன் வாரியர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 36 ரன்களையும், ஷாய் ஹோப் 28 ரன்களையும், குடகேஷ் மோட்டி 26 ரன்களையும், இம்ரான் தாஹிர் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் கயானா அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் நாதன் எட்வர்ட்ஸ், டெர்ரன்ஸ் ஹிண்ட்ஸ், வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 74 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் கயானா அணி கேப்டன் இம்ரான் தாஹிர் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷக்கரே பாரிஸ், இம்ரான் தாஹிர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை அடிக்க முயன்று தவறவிட்டார். இதனால் பந்து நேராக ஸ்டம்புகளை தாக்கியதன் காரணமாக பாரிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.