வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.
அடுத்த வருடம் நவம்பர்- டிசம்பரியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி எப்படியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என நினைக்கிறது. ஆனால், டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து தொடரை தவிர்த்து இன்னும் 25 போட்டிகளில்தான் இந்திய அணி விளையாட உள்ளன. இந்த நிலையில் தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய முகமது கைஃப், “50 ஓவர் உலகக் கோப்பைக்கு தன்னை தயார்படுத்த இந்திய அணி விரும்பினால் நியூசிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் தொடரில் இருந்து அதை செய்ய வேண்டியது அவசியம். உலகக் கோப்பைக்கு முன் அதிக அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இல்லை. உலகக் கோப்பை வரை 25 போட்டிகள் இருக்கலாம்.
முக்கியமான பிரச்சினை பந்து வீச்சில் உள்ளது. நீங்கள் ஷர்துல் தாகூரை பார்த்தீர்கள் என்றால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் விளையாடவில்லை. முகமது சிராஜ் இந்தியாவிற்கு திரும்பியதை பார்த்து இருப்பீர்கள். அவர் ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.
ஏன் புவனேஷ்வர் குமார் அணியில் இல்லை. அதற்கான எந்த காரணமும் என்னிடம் இல்லை. அவர் சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், அணியில் இடம் பெறவில்லை. புது வீரர்களை தேடுவதற்கான பழைய வீரர்களை இழந்து கொண்டு வருகிறோம். வைரத்தை தேடுவதற்கான தங்கத்தை தொலைத்த கதையாக இருக்கிறது.
உலகக் கோப்பைக்கு தயார் படுத்துதல் தொடங்கிவிட்டால், அதன்பின் பரிசோதனை என்ற பேச்சுக்கே நேரமில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் கடந்து விட்டால், உலகக் கோப்பைக்கான அணுகுமுறைகளை தேட வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, வீரர்கள் யார் என்பதை முடிவு செய்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.