இந்திய ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பந்து அதிரடி நீக்கம்; காரணம் இதுதான்!

Updated: Sun, Dec 04 2022 12:37 IST
Image Source: Google

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு பயணித்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடும் அத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4 ஆம் தேதியன்று தாக்கா நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அப்போது இந்திய அணியில் மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்படுவதை கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் அறிமுகமாக களமிறங்கிய நிலையில் சபாஸ் அஹமத், ஷார்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர் என 4 நல்ல ஆல் ரவுண்டர்கள் இடம் பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். 

சமீப காலங்களாகவே 50 ஓவர்களை வீசுவதற்கு 5 பவுலர்களை மட்டும் இந்தியாவின் டெக்னிக் காலாவதியாகி விட்டதாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அது போக சமீபத்திய நியூசிலாந்து ஒருநாள் தொடர் உட்பட சமீப காலங்களாகவே எக்ஸ்ட்ரா பவுலர்கள் இல்லாமல் இந்தியா முக்கிய தோல்விகளை சந்தித்து வருகிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 4 ஆல் ரவுண்டர்கள் களமிறக்கப்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

அதை விட விக்கெட் கீப்பராக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றும் எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிஷப் பந்த் இத்தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் துணை கேப்டனாக இருக்கும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படும் புதிய யுக்தியை ரோஹித் சர்மா கையிலெடுத்துள்ளார். இதனால் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அல்லது பவுலர் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதை விட விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டிருந்த ரிஷப் பந்த் காயமடையாத போதிலும் மருத்துவக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படி இந்த ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள பிசிசிஐ டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணியுடன் இணைந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் அவருக்கான மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் அக்சர் படேல் முதல் போட்டியில் விளையாடும் அணிக்கான தேர்வில் இல்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “சில காயங்கள் சில பிரச்சினைகள் இருப்பதால் நாங்கள் 4 ஆல் ரவுண்டர்களை கொண்டு வந்துள்ளோம். வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், ஷார்துல் தாகூர், சபாஸ் அஹமத் ஆகியோரும் வந்துள்ளார்கள். குல்தீப் சென் அறிமுகமாக களமிறங்கியுள்ளார். நானும் விராட் கோலியும் டாப் ஆர்டரில் விளையாடுகிறோம். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை