விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் - ரோஹித் சர்மா வேதனை!

Updated: Wed, Dec 07 2022 21:52 IST
Image Source: Google

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வங்கதேசத்தின் தாக்காவில் நடைபெற்றது.

தொடரை வெல்ல இரு அணிகளுக்குமே முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், மெஹ்தி ஹசன் (100*) மற்றும் மஹ்மதுல்லா (77) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது.

அதன்பின் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி (5) மற்றும் ஷிகர் தவான் (8) ஆகியோர் பெரிய ஏமாற்றம் கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும், அக்‌ஸர் பட்டேல் 56 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா அந்த ஓவரில் 14 ரன்கள் குவித்தாலும், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற போது அந்த பந்தில் ரன் எதுவும் எடுக்காததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. இந்தநிலையில், வங்கதேச அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சொதப்பிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “எனது கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் பெரிய பாதிப்பு இல்லை. எலும்பு முறிவு எதுவும் ஏற்படாததால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது. வங்கதேச அணியின் 6 விக்கெட்டுகளை இலகுவாக கைப்பற்றிய எங்கள் பந்துவீச்சாளர்களால் மிடில் ஓவர்கள் மற்றும் கடைசி ஓவர்களில் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க முடியவில்லை. கடந்த போட்டியிலும் இதே போன்ற தவறே நடந்தது. 

மிடில் ஓவர்கள் நிலவும் பிரச்சனையை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மெஹ்தி ஹசன் மற்றும் மஹ்மதுல்லாஹ் ஆகியோர் மிக மிக சிறப்பாக விளையாடினர். ஒருநாள் போட்டிகளில் பார்ட்னர்சிப் மிக அவசியமானது, அது இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை. 

மிடில் ஓவர்களில் தைரியத்துடன் விளையாடுவது மிக முக்கியம். சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதும் பிரச்சனையாக உள்ளது, இதிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணிக்காக விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும், இதை வீரர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை