நான் தோல்வியை கண்டு அஞ்சுபவன் அல்ல - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதன்மூலம் முதல் முறையாக முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றும் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து பல இக்கட்டான போட்டிகளை எதிர்கொண்டுள்ளோம். அதில் நாங்கள் பல பெரிய வெற்றிகளையும் பெற்றுள்ளோம், ஒரு அணியாக நாங்கள் பல நல்ல தருணங்களை எதிர்கொண்டுள்ளோம்.
ஆனால் மற்ற வெற்றிகளையும் விடவும் இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியானது என்னைப் பொறுத்தவரையில் 100சதவீதம் சிறந்தது. நான் இந்தியாவிற்கு முதல் முறையாக கேப்டனாக வந்துள்ளேன். நான் போட்டியை நன்கு கவனிக்கூடியவன் என்பதால் முதல் இன்னிங்ஸின் போது ஆடுகளத்தின் தன்மையை என்னால் முடிந்தவரை புரிந்து கொண்டேன். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன், ரோஹித் சர்மா எப்படி பீல்டிங் செட் செய்கிறார் என்பதையும் கவனித்தேன்.
டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு தனது அறிமுக போட்டியிலேயே 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதேபோல் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டுள்ள ஒல்லி போப் விளையாடிய விதத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இக்கட்டான சூழ்நிலையில் ஓலி போப் விளையாடியதை போன்று விளையாடுவது மிக கடினம். மேலும் அவர் விளையாடிய இந்த இன்னிங்ஸானது ஒரு இங்கிலாந்து பேட்ஸ்மேன் துணைக்கண்டத்தில் விளையாடிய மிகப்பெரிய இன்னிங்ஸாக கருதுகிறேன்.
நான் தோல்வியைக் கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒரு போட்டியில் தோல்வியடைவதால் எதுவும் மாறிவிடாது என நம்புபவன். ஆனால் வெற்றிக்காக முடிந்தவரை போராட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காக எங்களது வீரர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன், இந்த போட்டியிலும் அதுவே நடந்தது” என்று தெரிவித்துள்ளார்.