பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியிருக்க வேண்டும் - ரோஹித் சர்மா!

Updated: Sun, Jan 28 2024 20:14 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 436 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது நிலையில், 190 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய 196 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி 420 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களுகே ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்த ஒல்லி போப் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்ப்பட்டார். 

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றுள்ளதால் என்னால் தோல்விக்கான காரணத்தையும், எங்கு தவறு செய்தோம் என்பதையும் சுட்டிக்காட்டுவது மிக மிக கடினமாக உள்ளது. ஏனெனில் நாங்கள் முதல் இன்னிங்ஸின் முடிவில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தோம். அப்போது வெற்றி வாய்ப்பும் எங்களுக்கே அதிகம் இருந்தது. 

முதல் இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டோம். அதே போன்று தான் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஒல்லி போப் விளையாடிய விதம் அனைத்தையும் மொத்தமாக மாற்றிவிட்டது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களால் முடிந்தவரை போராடிய போதும் ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங்கிலும் சரிவர செயல்படவில்லை. இரண்டாவது இன்னிங்ஸின் போது சிராஜும், பும்ராவும் இணைந்து போட்டியை கடைசி நாளிற்கு எடுத்து செல்வார்கள் என நினைத்தேன்.

ஏனெனில் 20-30 ரன்கள் என்பது பெரிய ஸ்கோராக இருந்திருக்காது. ஆனால் அவர்களை குறை சொல்ல முடியாது. ஒரு அணியாக நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதே உண்மை. போட்டியை கடைசி நாளிற்கு எடுத்து சென்றிருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடியிருக்க வேண்டும். இது முதல் போட்டி என்பதால் இந்த போட்டியில் இருந்து பாடங்களை கற்று கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம். தவறுகளை எங்கள் வீரர்களும் திருத்தி கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை