பந்துவீச்சு குறித்து எந்தவித கவலையும் எங்களுக்கு கிடையாது - ரோஹித் சர்மா!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஓப்பனிங் வீரர்கள் கேஎல் ராகுல் 57 , ரோஹித் சர்மா 43, விராட் கோலி 49, சூர்யகுமார் யாதவ் 61, தினேஷ் கார்த்திக் 17 என அடுத்தடுத்து ரன்களை விளாசினர். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 237 ரன்களுக்கு 3 விக்கெட்களை குவித்தது.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்கமே அதிர்ச்சி தான். கேப்டன் பவுமா மற்றும் ரூசோ ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகினர். ஐய்டன் மர்க்ரம் 33 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் அந்த அணி 49 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்தது. அந்த அணி 100 ரன்களை கூட அடிக்காது என்று இருந்த சூழலில் அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. 3ஆவது விக்கெட்டிற்கு பின் ஜோடி சேர்ந்த மில்லர் - டிகாக் ஜோடி இந்திய பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர்.
கடைசி பந்து வரை முயன்றும் இந்திய பவுலர்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதனால் 200 ரன்களை தாண்டி தென் ஆப்பிரிக்கா அசால்டாக வந்தது. குறிப்பாக கடைசி சில ஓவர்களில் ரன்கள் ஏகபோகத்திற்கு சென்றன. டிகாக் 69, மில்லர் 106 என அடிக்க 20 ஓவர்களில் அந்த அணி 221 - 3 ரன்களை குவித்தது. அதிக இலக்கு வைத்ததால் மட்டுமே இந்தியா வென்றது, இல்லையெனில் இந்திய பவுலிங்கிற்கு சுலபமாக தென் ஆப்பிரிக்கா வென்றிருக்கும்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் விளக்கம், “பேட்டிங்கில் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை இன்று நிரூபித்துள்ளோம். அனைத்து போட்டிகளிலும் இது நடக்காது, எனினும் இதனை தொடர விரும்புகிறோம். கடந்த 8 - 10 மாதங்களாக வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சரியாக செய்து வருகின்றனர். குறைந்த அனுபவமே இருந்த போதிலும் இதனை செய்கின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை கடந்த 5 - 6 போட்டிகளாக டெத் ஓவர்களில் பிரச்சினை உள்ளதுதான். ஆனால் இதையே தானே எதிரணிகளின் பந்துவீச்சில் நாமும் செய்கிறோம். டெத் ஓவர்களில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். அங்கு தான் போட்டியின் வெற்றியே தீர்மானிக்கப்படுகிறது. எனவே இதில் எந்தவித கவலையும் எங்களுக்கு கிடையாது. இதே போன்று வெற்றி கிடைத்தால் போதும்.
சூர்யகுமார் யாதவை இனி விளையாடவைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த போட்டிகளிலும் அவரை விளையாட வைக்காமல் நேரடியாக அக்டோபர் 23ஆம் தேதி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரை இதே போன்று மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.