IND vs SL, 2nd Test: மீண்டும் சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; இலங்கை தடுமாற்றம்!

Updated: Sun, Mar 13 2022 22:01 IST
IND v SL: India In Cruise Control, Sri Lanka Need 419 Runs To Win (Image Source: Google)

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, பும்ராவின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 109 ரன்களுக்கே சுருண்டது இலங்கை அணி. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

143 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 22, ரோஹித் சர்மா 46, ஹனுமா விஹாரி 35, விராட் கோலி 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் 5ஆம் வரிசையில் இறங்கிய ரிஷப் பந்த், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய ரிஷப் பந்த் 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார் ரிஷப் பந்த். ஆனால் அரைசதம் அடித்த மாத்திரத்தில் 50 ரன்களிலேயே அவுட்டும் ஆனார். 

இதையடுத்து மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த இன்னிங்ஸுலும் அரைசதம் கடந்தார். அதன்பின் இந்த இன்னிங்ஸிலாவது சதமடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இலங்கை தரப்பில் பிரவீன் ஜெயவிக்ரமா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் லஹிரு திரிமானே மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை