மிடில் ஆர்டரில் நமது பிரச்சனை தீர்ந்துவிட்டது - ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 0 என்ற கைப்பற்ற நிலையில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஒருநாள் தொடரை காட்டிலும் டி20 தொடரில் வலுவான அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவிக்க அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் மட்டுமே குவிக்க 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமான அணி சேசிங்கில் எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடிய ஒன்று. அந்த அணியில் ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஆனாலும் அதே போன்று சேசிங்கிலும் நமது அணி தற்போது நல்ல பலத்துடன் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் முற்றிலும் புதிய ஒன்றாக இருந்தது. இருந்தாலும் இந்த தொடரின் போது இந்திய வீரர்கள் விளையாடிய விதம் எனக்கு திருப்தி அளிக்கிறது. நாங்கள் என்ன நினைத்தோமோ அது இந்த தொடரில் நடந்தது. ஒரு அணியாக நாங்கள் ஒரு இளம் அணி எனவே நிச்சயம் அந்த பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.
சேசிங்கின் போதும் நமது அணி சிறப்பாகவே இருந்து வருகிறது. சில வீரர்கள் அணியில் இருந்து விலகி இருந்தாலும் இப்போதும் நமது அணி சிறப்பான ஒன்றாக இருக்கிறது. வீரர்கள் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மிடில் ஆர்டரில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளது நிச்சயம் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒன்று. அந்த வகையில் நமது மிடில் ஆர்டரில் இருந்த பிரச்சினையும் தீர்ந்து விட்டதாக நினைக்கிறேன்.
பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ஷல் பட்டேல் அணிக்கு புதிதாக வந்தவர். அதே போன்று ஆவேஷ் கானும் இப்போதுதான் அறிமுகமாகியுள்ளார். ஷர்துல் தாகூர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தாலும் அனைவரும் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமான பேட்டிங் அணிக்கு எதிராக நமது அணி பந்து வீசிய விதம் சிறப்பாக இருந்தது. அடுத்து வரும் இலங்கை தொடரிலும் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.