IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை 276 ரன்களில் கட்டுப்படுத்திய இந்தியா!
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வார்னருடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் அரைசதம் கடந்த கையோடு, சிக்சர் அடிக்க முயற்சித்து 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தும் 41 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே - கேமரூன் க்ரீன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதில் மார்னஸ் லபுஷாக்னே 39 ரன்களுக்கும், காமரூன் க்ரீன் 31 ரன்களிலும் என துரதிர்ஷ்டவசமாக தங்களது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த ஜோஷ் இங்கிலிஸ் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 29 ரன்களிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்கலிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மேத்யூ ஷார்ட், சீன் அபேட் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதில் சீன் அபேட்டின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் முகமது ஷமி தனது 5 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒருசில் பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.