IND vs AUS, 1st T20I: பெத் மூனி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Updated: Fri, Dec 09 2022 22:02 IST
IND vs AUS, 1st T20I: Beth Mooney leading Australia's charge in the run chase! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.இப்போட்டியின் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கிய ஷஃபாலி வர்மா 10 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 28 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - தேவிகா வைதியா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தீப்தி சர்மாவும் பவுண்டரிகளை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது.

அதிலும் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி தீப்தி சர்மா அட்டகாசம் செய்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காம் இருந்த தீப்தி சர்மா 15 பந்துகளில் 36 ரன்களையும், தேவிகா வைதியா 25 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலிசா ஹீலி 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த பெத் மூனி அரைசதம் கடந்தார்.

இதையடுத்து களமிறங்கிய தஹிலா மெக்ராத்தும் தனது பங்கிற்கு 30 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய மகளிர் அணி 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 89 ரன்களையும், தஹிலா மெக்ராத் 40 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மறுநாள் இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை