IND vs AUS, 3rd T20I: க்ரீன், டேவிட் காட்டடி; இந்தியாவுக்கு 187 டார்கெட்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு காமரூன் க்ரீன் - கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் க்ரீன் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் இருந்த ஆரோன் ஃபிஞ்ச் சிங்கிள் எடுத்த க்ரீனிற்கு ஸ்டிரைக் கொடுத்து வந்தார்.
பின் 7 ரன்களில் ஃபிஞ்ச் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த காமரூன் க்ரீன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் இந்திய அணிக்கெதிராக ஒரு வீரர் அடித்த அதிவேக அரைசதமாகவும் இது அமைந்தது.
பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த காமரூன் க்ரீன் 51 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - டேனியல் சாம்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாம்ஸ் பொறுமையாக விளையாட, டிம் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இறுதியில் டேனியல் சாம்ஸும் தனது பங்கிற்கு பும்ராவின் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசி தள்ளினார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய டிம் டேவிட் 25 பந்துகளில் அரைசதம் கடந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்தார். இறுதியில் 54 ரன்களில் அவரும் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.